Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, August 12, 2008

ஹைதராபாதில் இன்னுமொரு மழைக்காலம்....

மழையும் நானும்...., என்னை வரவேற்க வந்த மழை.... & கேரளாவிலும் என்னை வரவேற்ற மழை.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...

இந்த மாநகரத்தில் நான் கால் வைத்து ஒரு வருடம் தாண்டியாகிவிட்டது.... கடந்த வருடம் என்னிடம் Bike இல்லை.... மழையும் குறைவு.... அதனால் மழைக்காலம் என்னை அதிகம் வதைக்கவில்லை.... இம்முறை மேற்கூறிய இரண்டும் மாறியதால் இங்கு நான் மழையை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.... தினம் தினம் மழையில் நனைவது வழக்கம் ஆகிவிட்டது.... அதிலும் நாங்கள் வீடு மாறியபோது உண்டான அனுபவம் மற்றவற்றை சிறுமை படுத்திவிட்டது....

ஒரு வருடத்தில் நாங்கள் மாறும் மூன்றாவது வீட்டுக்கு மாறின போது உண்டான அனுபவம் தான் இது.... பகலெல்லாம் வேறு வேலை (நான் கிரிக்கெட் ஆட போனேன்.... என்னுடன் வாழும் நண்பர்கள் தூங்கினார்கள்) பார்த்துவிட்டு சாயங்காலம் 6:30 மணிக்கு நாங்கள் Lorry பார்க்க போனோம்.... ஒருவன் கிடைத்தான்.... அவன் ஆயிரம் ரூபாய் கேட்டான்.... முடியாது, அது ரொம்ப அதிகம் என்று சொன்ன போது.... மழை பெய்யும் போல் உள்ளது.... இருட்டியும் விட்டது என்றான்.... நாங்களும் சம்மதித்தோம்.... அவர் வாய்முஹுர்த்தம்.... நான் அங்கிருந்து புறப்படும் முன்பே மழையும் பெய்தது.... லேசாகவா பெய்தது.... இல்லை வானம் பொழிந்தது....

கொட்டும் மழையில் நாங்கள் பொருட்களை தெருக்கோடியில் நின்ற Lorry இல் ஏற்றினோம்.... மூன்று கட்டில், ஒரு Cooler, இரண்டு மேஜைகள், தொலைக்காட்சி, கணினி இப்படி அத்தனை பொருட்களையும் நாங்கள் மூன்று பேருமே ஏற்றினோம்.... என் அப்பா சொல்வார், மழையில் நன்றாக நனைந்தால் ஒன்றுமே செய்யாது.... லேசாக நனைந்தால் தான் ஜலதோஷம் வரும் என்று. அதை மனதில் வைத்தே நான் நன்றாக நனைந்தேன்.... அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது.... ஒரு மணி நேரம் தொடர்ந்து மழையில் நனைந்தும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.... நன்றி மழையே, இம்முறை நீ என் நம்பிக்கையை முறிக்கவில்லை....

பாவி செல்லும் இடம் பாதாளம் என்று மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.... அதுபோல் என் விஷயத்தில் நம்பிக்கையை காத்த மழை, என் கட்டில் விஷயத்தில் என் காலை வாரி விட்டது.... Lorry இல் கொண்டு வந்த போது மேலே அவர் ஏதோ ஒரு Sheet வைத்து மூடித்தான் வைத்திருந்தார். ஆனால் அந்த sheet இல் இருந்த ஒரு கீறல் வழியாக கசிந்த மழைநீரில் நனைந்து என் கட்டில் நாசமாக போனது.... கசிந்த நீருக்கு விழ வேறு இடமே கிடைக்கவில்லையோ.... அந்த மழைத்துளிகளும் என்னை போல் அந்த மஞ்சத்தில் ஓய்வெடுக்க ஆசைப்பட்டதோ.... யாம் அறியோம் பராபரனே.... ஆனால் இன்னும் அதே கட்டிலில் தான் நான் தூங்குகிறேன்.... என்று கட்டிலும் உடைந்து என் முதுகையும் உடைத்துக்கொள்ள போகிறேனோ....

அன்று என் நண்பர்கள் மழையை வெறுத்தார்கள் (இன்றைய நிலை தெரியவில்லை), நானும்.... அனால் அந்த அனுபவத்தில் ஒரு புதுமையும் இருந்தது.... வெறுப்பிலும் ஒரு சிறிய ஆனந்தம் இருந்தது, அந்த நனைதலில்....
அன்று ஆரம்பித்த மழை கடந்த இரண்டு நாட்கள் முன்பு வரை பிய்த்துக்கொண்டுதான் பெய்தது.... துணிகள் துவைத்துப்போட்டால் காயாது.... போதாதகுறைக்கு தினமும் உடுத்தும் உடைகள் சேரும் சகதியுமகத்தான் வீடு திரும்புகிறது....

நான் தலைக்கு எண்ணை போட்டு மூன்று நாள் ஆகின்றது.... ஆம் குளிரில் நான் உறைவது போலவே எண்ணையும் உறைந்துபோகிறது.... ஆனாலும் இந்த குளிரை நான் மிகவும் ரசிக்கிறேன்.... ஆனால் என்ன குளிருக்கு இதமாக நல்ல டீயோ காபியோ இங்கு இல்லை.... இந்த குளிரில் அதிக நேரம் தூங்க விரும்பும் எனக்கு Training என்ற பேரில் தூக்கத்துக்கும் சீக்கிரமாகவே முற்றுபுள்ளி....

கடந்த இரண்டு நாட்களாக மேகங்கள் சற்று இடம் விட சூரியன் மெல்ல தலை காட்டுகிறது.... இது இப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறேன்.... அனால் இந்த மழை என்று தான் என் நம்பிக்கைப்படி நடந்துள்ளது.... மேலும் என்னுடன் விளையாடுவது தானே அதற்க்கும் பிடிக்கும்.... பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் மழையின் மனதில் என்ன உள்ளதென்று....

இந்த வருடம் கேரளாவில் மழை குறைவாம்.... ஜூன் ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லையாம்.... எல்லாவற்றுக்கும் சேர்த்து அடுத்த மாதம் பயங்கரமாக மழை பெய்யும் என்பது அங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பு....

நான் அடுத்த மாதம் திருவனந்தபுரம் செல்கிறேன், ஓணம் பண்டிகைக்காக.... அதை எப்படியோ தெரிந்துகொண்ட இந்த பொல்லாத மழை கேரளாவிற்கு என்னை வரவேற்ப்பதர்க்காகவே இரண்டு மாதம் பெய்யாமல் காத்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு தானே தெரியும்....

கேரளாவிலும் என்னை வரவேற்ற மழை....

மழையும் நானும்.... & என்னை வரவேற்க வந்த மழை.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...

ஹைதராபதிற்கு வந்த பிறகு நான் மூன்று முறை திருவனந்தபுரம் சென்றுள்ளேன்.... முதல் இரண்டு முறையும் என்னை மறந்த மழை (நானும் மழையை மறந்து விட்டேன்), மூன்றாவது முறை வட்டியும் முதலுமாக கணக்கை முடித்துவிட்டது.... 'என்னை மறந்ததேன்...' என்று நான் மழையை கேட்கவில்லை, அனால் மழை என்னிடம் அப்படி கேட்க விரும்பியதோ என்னமோ, மழையை மறந்ததற்கு எனக்கு நல்ல தண்டனையையும் தந்தது....

ஜூன் மாதம், ஹைதராபாத்தில் வெயில் மனிதனை பகலில் பொரித்தெடுத்தது.... ரயிலில் வந்த போது நான் அதை நன்றாக அனுபவித்தேன்.... அப்போது மழை பெய்யக்கூடாதா என்று நான் எதிர்பார்த்து உண்மை தான்.... அப்போது சற்று மழை பெய்யவும் செய்தது.... அதற்க்கு நான் வருணதேவனுக்கு நன்றியும் தெரிவித்தேன்.... ஆனால் நன்றி சற்று கூடுதலாக சொல்லிவிட்டேன் என்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிறகு தான் புரிந்தது....

கொல்லம் வருவது வரை மழைக்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லை.... அனால் கொச்சுவேளி (திருவனந்தபுரத்திற்கு முந்தய நிறுத்தம்) வந்த போது கார்மேகம் வானத்தை ஆக்கிரமித்திருந்தது.... மழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக வீடுபோய் சேர வேண்டுமென்ற என் ஆசையை வருணபகவான் இம்முறை கேட்க்கவில்லை.... ரயில் நிலையத்தில் நான் கால் வைப்பதற்கு சில நோடிகள் மட்டும் இருக்கவே மழை வானத்தை பிய்த்துக்கொண்டு பெய்ய ஆரம்பித்தது....

நனைந்துகொண்டே என் ராட்ஷச பெட்டியை உந்தியும் தூக்கியும் எப்படியோ ரயில் நிலைய வாசல் வந்துவிட்டு தந்தையை தொலைபேசியில் அழைத்தேன்....அழைத்து இப்படி பேசினேன்....

நான்: "அப்பா....இங்க ரொம்ப மழை பெய்யுது....நீங்க வர வேண்டாம்....நான் ஆட்டோ பிடிச்சு வந்திருதேன்...."

அப்பா: "ஆஹா....நீ வந்துட்டியா....மழை எங்க....இங்க மழையே இல்லையே"

நான் என் விதியை நொந்துகொண்டே தொடர்ந்து பேசினேன்....

நான்: "அப்படியா....ஆனா இங்க நல்ல மழை....பரவாயில்ல....நான் வந்திருவேன்....நீங்க வீட்ல இருங்க...."

பேசிக்கொண்டிருந்தபோதே என் கைபேசியின் உயிர் தோய்ந்துகொண்டிருப்பதையும் நான் கவனிக்க மறக்கவில்லை.... அப்படியே நான் மழையில் நனைந்து கொண்டே ஆட்டோ ஏறுவதற்காக Pre-paid Counter முன் நின்று கொண்டிருந்தேன்.... நானும் நின்றுகொண்டுதான் இருக்கிறேன் வரிசை முன்னாள் நகழவே மறுத்தது.... விசாரித்ததில் ஆட்டோவுக்கே தட்டுபாடு என்று தெரிந்துகொண்டேன்.... அதற்கிடையில் மழை சற்று ஓய்ந்தது.... உடனே நான் தந்தையை கைபேசியில் அழைத்து இப்படி பேசினேன்....

நான்: "அப்பா....இங்க ஆட்டோவே இல்ல....மழையும் நிண்ணுருச்சு....நீங்க உடனே கிளம்பி வாங்க....நான் wait பண்ணறேன்...."

அப்பா: "சரிடா....நான் பத்தே நிமிஷத்துல வந்துருதேன்...."

அதற்கிடையில் என் கைபேசி தன் கடைசி நொடிகளில் வாழ்ந்துகொண்டிருந்தது.... பத்து நிமிடம் தாண்டி கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.... அப்பாவின் கைபேசி எண்ணிலிருந்து தான் அழைப்பு.... அவர் வந்துவிட்டார் என்ற ஆனந்தத்தில் நான் பேச ஆரம்பித்தபோது என் கைபேசி செத்தது....

சரி பேசாவிட்டால் என்ன.... வெளியே போய் தேடிப்பார்த்தால் தெரியும் எங்குள்ளார் என்று.... இந்த எண்ணத்தில் நானும் தேடிப்பார்த்தேன்.... இல்லை.... அப்பா அங்கு எங்கும் இல்லை.... விதியின் வேடிக்கையை எண்ணி வியந்து கொண்டு நான் ரயில் நிலையத்தில் உள்ள போது தொலைபேசியிலிருந்து அப்பாவின் கைபேசியை அழைத்தேன்.... 'முடியல....' 'Number Busy' என்று கூறி என் உயிரை எடுத்தது.... முப்பது மணிநேரம் ரயிலில் சிலவு செய்தபோது தோணாத அலுப்பு அந்த முக்கால் மணிநேரத்தில் எனக்கு தோணியது.... எப்படியோ அப்பாவின் கைபெசியுடன் தொடர்பு கிடைத்தது.... அவரிடம் இருந்து வந்த பதில், மழை ஏன் என்னுடன் இப்படி விளையாடுகிறது என்று என்னை எண்ணச்செய்தது.... ஆம், "இப்ப எங்க இருக்குரீங்கப்பா...." என்ற என் கேள்விக்கு அப்பா சொன்ன பதில் "வீட்ல இருந்து கெளம்பின ரெண்டாவுது நிமிஷம் மழை பயங்கரமா விழ ஆரம்பிச்சுருச்சு....அதான் கொஞ்சம் ஒதுங்கி நிக்குறேன்....மழை கொஞ்சம் விட்டுருக்கு....இன்னும் பத்து நிமிஷத்துல நான் வந்துருவேன்...."

ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தால் இப்பொழுது ஆட்டோவுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, மழைக்கும்.... இன்னொருமுறை risk எடுக்க விரும்பாததால் மழையானாலும் என்னவானாலும் அப்பாவுடனே வீட்டிற்கு போவது என்று காத்திருந்தேன்.... அப்பாவும் வந்தார்.... நன்றாக நனைந்திருந்தார்.... நானும் மழையை பொருட்படுத்தாமல் அப்பாவுடன் scooter இல் ஏறி கிளம்பினேன்....

இப்படி மழையில் ஆரம்பித்த அந்த விடுமுறை மழையில் நனைந்தே முடிந்ததும் போனது.... தங்கையின் பிறந்தநாளும் அக்காவின் நிச்சயமும் அந்த நனைந்து போன விடுமுறையின் Highlights....

என்னை வரவேற்க வந்த மழை....

மழையும் நானும்.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...

இப்படியும் மழை பெய்யக்கூடுமா.... பெய்தாலும் இப்படியா தண்ணி ரோட்டில் தங்கும் என்று என்னை வியக்க வைத்தது அந்த நாள். அந்த நாள் இன்றைக்கு ஒரு வருடத்துக்கும் முன் நான் இந்த ஹைதராபாத் மாநகரில் கால் வைத்த முதல் நாள்....

ஹைதராபாத்தில் வேலை கிடைத்த என்னை இங்கு வரை விட்டு செல்ல வந்த என் தந்தைக்கோ அது எங்களை ஹைதராபாத்திற்கு வரவேற்கின்ற மழையாகவே தோன்றியது.... அப்படியே நானும் எண்ணிக்கொண்டேன்.... அந்த மழைக்காலம் என்னை அதிகம் தொல்லை படுத்தவில்லை, அந்த முதல் நாளை தவிர....

அந்த முதல் நாள் மழையை சற்று சுருக்கமாக விவரிக்கவேண்டும் என்றால், அதற்க்கு நான் அன்று நடந்த சிறிய சம்பவங்களை இங்கு கூறியே ஆக வேண்டும்....

சிகந்தராபாத் ரயில் நிலையத்தில் இறங்கிய எங்களை வரவேற்றது மழை அல்ல, என் உறவுக்கார அண்ணன்.... அவர் வீட்டிற்கு சென்ற நாங்கள், அன்று சாயங்காலம் நகரத்தை சுற்றி பார்த்து விட்டு எனக்கு Company தந்த Guest House க்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்....

வீட்டில் இருந்து காரில் கிளம்பிய சமயம் முதலே மழை சிறிதாக தூறத்தான் செய்தது..... நேரம் செல்லச்செல்ல மழை வலுக்கவும் செய்தது. நாங்கள் நெக்லஸ் ரோடு வந்தடைந்த போது ரோட்டில் தண்ணி பயங்கரமாக ஓடுவதை பார்த்து நான் சற்றே பயந்துவிட்டேன்.... நதியே இல்லாத இந்த ஹைதராபாத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்தால் யாருக்கு தான் வியப்பாக இருக்காது.... ஆனால் என் அண்ணன் 'இதெல்லாம் இங்க சாதரணமப்பா' என்ற மாதிரி ஒரு Expression கொடுத்தார், சரி என்று நான் திரும்பி மழையை ரசிக்கலாம் என்று திறந்திருந்த கார் ஜன்னல் பக்கம் திரும்பினால், சற்றுமே எதிர்பாராமல் என் மேல் ஒரு வாளி தண்ணி தெளிக்கப்பட்டது.... நன்றி: எங்களுக்கு இடது பக்கத்தில் விரைந்து சென்ற இன்னொரு கார். அண்ணனிடமிருந்து 'அப்பவே சொன்னோம்ல' என்ற Expression வர நானும் கார் ஜன்னலை மூடிக்கொண்டு மழையை ரசிக்கலாம் என்று முடிவுசெய்தேன்....

ஒரு வழியாக லும்பினி பார்க் (ஆம் வெடிகுண்டு வெடித்த அதே பூங்கா தான்) வது சேர்ந்தோம். அந்நேரம் மழையின் வேகம் சற்று குறைந்திருந்தது.... அந்த நம்பிக்கையில் நாங்கள் அந்த திறந்த அரங்கத்தில் Laser Show பார்க்கச்சென்றோம்.... ஷோ ஆரம்பித்து சிறிது நேரத்தில் மழை மேலும் வலுத்தது.... மழையின் சீற்றம் கையை மிஞ்சியபோது அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நிழல் தேடி ஓட ஆரம்பித்தார்கள்.... நாங்களும் அவர்களில் உட்பட்டவர்கள் என்று இங்கு குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை என்று தோனுகிறது....

மழையின் பயங்கரத்தில் ஷோவும் நிறுத்தப்பட்டது.... ஒரு மணி நேரத்துக்கும் மேல் நின்ற பிறகு தான் இன்னும் நின்று பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.... எப்படியோ தத்தி பித்தி நன்றாக நனைந்து காருக்குள் நுழைந்தோம்.... நேரம் பத்து மணியையும் தாண்டி விட்டது....

ஒரு வழியாக Guest House க்கு வந்து சேர்ந்த போது மணி இரவு பதினொன்றரை.... நாங்கள் யாருமே இரவு உணவும் அருந்தவில்லை.... பசி வாட்டி எடுத்தபோதிலும் நாங்கள் அந்த இரவு மழைக்கு நன்றி சொல்லியே கடத்திவிட்டோம்.... ஹைதராபாத்துக்கு எங்களை வரவேற்ற மழைக்கு நன்றி சொல்லாமலிருப்பது தவறல்லவா....

மழையும் நானும்....

கேரளாவில் வளர்ந்த எனக்கு மழை ஒன்றும் புதிய விஷயம் அல்ல.... ஜூன் மாதம் ஒன்றாம் தேதி (முதல் வாரம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்) பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் பொழுது எங்குமே புதிய சீருடைகள், ஷூக்கள், புத்தகங்கள் வாங்குவது வழக்கம்.... ஆனால் கேரளாவில் இவையுடன் புதிய குடை வாங்குவதும் வழக்கம்.... ஜூன் மாதம் துவங்கும் மழை கேரளத்தில் மிக பிரசித்தம்....

நான் அப்படி கூறும் பொழுது ஜூனில் மட்டும் தான் அங்கு மழை பெய்ய்மோ என்று நீங்கள் எண்ண வேண்டாம்.... வருடத்தில் எட்டு முதல் பத்து மாதம் வரை அங்கு மழை பெய்யும்.... ஆனால் கோடை மாதங்களுக்கு பிறகு பெய்யும் அந்த ஜூன் மாத மழை புதிய வருடத்தை துவங்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு தனி குதூகலத்தை கொடுக்கும்....

அப்படி மக்களுக்கு தொல்லை தராத.... சில நேரம் மட்டும் பலமாகவும், மிச்ச நேரம் இதமாகவும் பெய்யும் இந்த மழையுடன் எனக்கு உண்டான சில அனுபவங்கள் தான் தொடரும் எழுத்துகளில் நான் பகிர்ந்துகொள்கிறேன்....