Saturday, December 13, 2008

நிழலும் நிஜமும்...

சாயங்கால நேரம், வெட்டவெளி மைதானம், Commando படையின் தலைவனான மேஜர் விக்ரமன் தன்னந்தனியாக தீவிரவாதிகளுடன் ஒரு Encounter நடத்திக்கொண்டிருந்தார். தீவிரவாதிகளின் AK-47 இல் இருந்து பறக்கும் தோட்டாக்களில் இருந்து தப்பித்து, தனது துப்பாக்கியால் தீவிரவாதிகளை பதம் பார்த்துக்கொண்டிருந்தார். நாற்பது வயதை தாண்டி, சற்றே தொப்பையுடன் இருந்த அவர், தாக்க வந்த தீவிரவாதிகளுடன் ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அவரது வீரம், தைரியம், சாமர்த்தியம் எல்லாமே அங்கு நடந்த அந்த காட்சியில் தெரிந்தது. அவர் பறந்து பறந்து எதிரிகளை தாக்கியதை பார்த்தால் யாருமே மூக்கில் விரல் வைத்து விடுவார்கள்.

இருபது நிமிட போராட்டத்தின் முடிவில் பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் உடல் மைதானத்தின் பல இடங்களிலாக சலனமற்று கிடந்தது. நம் மேஜரின் கருப்பு சட்டை கொஞ்சம் அழுக்கு ஆகி இருந்தது, பெரிய காயங்கள் ஒன்றும் அவர் உடம்பில் தெரியவில்லை. சுற்றும் பார்த்த அவர் முகத்தில் ஒரு புயலுக்கு பின் இருக்கும் அமைதி தெரிந்தது. ஒரு Military Officer-க்கே ஆன கம்பீரத்துடன் அவர் பேச ஆரம்பித்தார். நாடு, வீடு, தீவிரவாதம், சமாதானம், யுத்தம், மதம், அரசியல் இப்படி அனைத்தையும் Cover செய்து ஒரு முழு நீள Cinema Style Lecture-ஐ கொடுத்து முடித்தார். மெல்ல Crane உயர, Camera அந்த மைதானத்தையும் அதற்க்கு நடுவில் நின்று பேசி முடித்து நடக்க ஆரம்பித்த மேஜர்-ஐயும் Top View-வில் படம் எடுத்து.

"Cut It..." "Super Shot Sir....அசத்திட்டிங்க....Chance-ஏ இல்ல...!!!!" இயக்குனர் தனது Mic மூலம் ஹீரோவை பாராட்டினார். புன்சிரிப்புடன் தன் நாற்காலியில் வந்து அமர்ந்தார் 'தேசப்பற்று நாயகன்' விக்ராந்த். "என்ன சார் பெரிய பிரமாதம்....பிடிச்ச விஷயத்தையே Camera முன்னாடியும் செய்ய, கொடுத்து வச்சிருக்கணும்....தேசபக்தி-ங்கறது என் ரத்தத்துல ஊறியது சார்....அதையே தான் நான் திரையில சொல்லறேன்..." "இல்ல சார்....நீங்க எவ்வளவு பிரமாதமா இந்த மாதிரி characters பண்ணுறீங்க தெரியுமா....உண்மையான Military Commandos கூட உங்களோட Body Language-அ பாத்து படிக்கணும்...." "சார்....நீங்க என்ன ரொம்பவே புகழ்ரீங்க-ன்னு நெனைக்குறேன்..." பேசிக்கொண்டே தனது Secretary பற்ற வைத்து கொடுத்த Davidoff Cigarette-ஐ புகைக்க ஆரம்பித்தார். "சார் நீங்க அடுத்த Scene-க்கு Ready ஆயிட்டு இருங்க, நான் போயி அந்த Associatte கிட்ட அடுத்த Scene-க்கு Arrangements பண்ண சொல்லிட்டு வரேன்...." என்று சொல்லிவிட்டு Director விலகி சென்றார்.

Director விலகியதும் தனது Cellphone-இல் யாருக்கோ Call செய்தார் விக்ராந்த், மரியாதையுடன் எழுந்து நின்று குரலை சற்று தாழ்த்திக்கொண்டு பேச ஆரம்பித்தார், கையால் Sceretary-ஐ போ என்று ஜாடை காட்டினார்.

"வணக்கம் பாய்...."
"நம்ம படம் Shooting Spot-ல இருந்து தான் பாய் பேசுறேன்...."
"நல்லா போயிட்டு இருக்கு பாய்....எல்லாம் உங்க தயவு....பேருக்கு நான் Produce பண்ணறேன்....எல்லாம் உங்க பணம் தான பாய்...."
"ஆமா பாய்...இதுலயும் Military Officer Role தான்....இப்ப தான் பத்து பன்னெண்டு பேர சுட்டு போட்டேன்....", லேசாக சிரித்தார்.
"சரி பாய்....நம்ம பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க....Problem ஒண்ணும் இல்லல்ல..."
"Hello...Hello...விக்ராந்த் Sir-ங்களா....Sir நான் உங்களோட Fan Sir....என் பேரு..." என்று யாரோ இடையே பேச Tension ஆனார் விக்ராந்த்.
"Shit Cross talk-நு நெனைக்குறேன்....நாய்களுக்கு எப்படித்தான் Number கெடைக்குதோ தெரியல....அதோட இந்த Cross talk வேற...அந்த Phone Company-காரன முதல்-ல சுடனும்...."
"சரி பாய்....நான் Shooting முடிஞ்சப்பறம் பேசுறேன்....சலாம் பாய்...."

இதேநேரம் Associate-இடம் பேசிக்கொண்டிருந்த Director விக்ராந்தை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்,

"எவ்வளவு நல்ல மனுஷன்யா....இந்த வயசுலயும் என்ன Dedication....Dialogue-ல எல்லாம் என்ன ஒரு fire....இவர பத்தியும் தப்பா பேசுறாங்க யா....எப்படித்தான் அப்படி பேச தோணுதோ....தங்கமான மனுஷன் யா....நாட்டுக்காகையும் எவ்வளவு பண்ணறார்....Kargil யுத்தம், Tsunami-நு என்ன விஷயம் வந்தாலும் சும்மா அள்ளி கொடுக்குறார் யா...."

நேரம் ஆறு மணியை தாண்டியிருக்கும் "Packup" சொன்னார் Director. தனது Audi SUV-இல் புறப்பட தயாராயிருந்த விக்ராந்திடம் சென்றார் Director.

"சார் அந்த Airport Fight Scene நாளைக்கே எடுத்துரலாம்....நான் நம்ம Minister-அ பிடிச்சு அதுக்கு Permission வாங்கிட்டேன்....நாதாரி, இந்த தடவ ரொம்ப அலையை விட்டுட்டான்....காசும் கொஞ்சம் அதிகமாவே வாங்கிட்டான்...." என்று சொன்ன Director-க்கு ஆறுதல் சொன்னார் விக்ராந்த், "ஹ்ம்ம்....என்ன பண்ண சார், எல்லாம் plan பண்ண மாதிரியே நடக்கணும்-ணா அப்படி இப்படி கொஞ்சம் செலவு ஆவ தான் செய்யும்...ஒண்ணும் இல்லன்னாலும் நம்ம படத்தோட Highlight-ல அந்த Airport sequence....பரவாயில்ல விட்டுருங்க...". "ஆமா சார் அதுவும் Correct தான்....கொஞ்சம் செலவானா என்ன...நம்ம Airport-ஓட எந்த முக்குலையும் Shoot பண்ண Permission கெடச்சிருச்சு....சும்மா அசத்தீரலாம்ல....இதுவர எவனும் காட்டாத மாதிரி, எவனுமே இனிமேலும் காட்ட முடியாத மாதிரி ஒரு Chase and Fight Sequence வச்சிரலாம்...." "ஆமா...ஆமா....கண்டிப்பா...." என்று சொல்லிக்கொண்டே வண்டியை கிளப்பி பறந்தார் விக்ராந்த்.

"பாருய்யா.... படம் perfect-ஆ வரணும், செலவெல்லாம் பரவாயில்லன்னு சொல்லறார் பாரு....அவரு தான்யா உண்மையான Hero...." பெருமையாக சொல்லிக்கொண்டார் Director.

இதேநேரம், ECR-இல் உள்ள தனது பண்ணைவீட்டை நோக்கி பறந்து கொண்டிருந்த விக்ராந்தின் Cellphone-இல் இருந்து பாய்க்கு மீண்டும் Call சென்றது.

"பாய்....நாளைக்கு நம்ம பசங்க ரெண்டு பேர அனுப்பி வைங்க...நம்ம Airport Operation-க்கு Detailed-ஆ Plan பண்ண Airport-அ நல்ல படிக்கணும்-நு சொன்னீங்கல்ல....நாளைக்கு நம்ம படம் Shooting Airport-ல தான் நடக்குது....நீங்க பசங்கள அனுப்பினீங்கண்ணா, Personal Makeup man, Hair Designer-நு ஏதாவது சொல்லி என்கூடையே வச்சிக்குறேன்....அந்த லூசுப்பய Director, Airport full-ஆ Shoot பண்ண Permission வாங்கியிருக்கான்....நம்ம வேல simple-ஆ முடிச்சுரலாம்....Easy-யா ஒரு Detailed Map-ஏ போட்டுறலாம்...."

"ஆங்....அப்புறம் பாய்....அந்த Pakistan பசங்கள அனுப்பீராதீங்க....தமிழ் பேச தெரிஞ்சவங்களா, நம்ம ஊரு பசங்கள மாதிரி உள்ள ரெண்டு பேர பாத்து அனுப்புங்க....அப்படியே அவங்க கிட்ட ஆளுக்கு ரெண்டு "பெரிய" Suitcase-உம் கொடுத்து அனுப்பி வச்சிருங்க பாய்...."

"Thanks பாய்....சலாம் பாய்...."

ஒரு விசித்திரமான புன்னகையுடன் Phone-ஐ Cut செய்த விக்ராந்த, தானே ஒரு Davidoff Cigarette-ஐ பற்றவைத்து புகைத்தார். திறந்திருந்த Car ஜன்னல் வழியாக வெளியே சென்ற புகை காற்றோடு காற்றாக கலந்தது...அவர்களுக்குள் நடந்த பேச்சை போலவே...!!!

Saturday, October 18, 2008

சொல்லாமலே....


அவன் தன் அறைக்குள் அமர்ந்து Laptop Screen-ஐ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். இடையிடையே தன் கைக்கடிகாரத்தையும் பார்த்து மறுபடியும் பொறுமையின்றி Screen-க்கே தன் கவனத்தை திருப்பினான். மணி பத்தரை ஆக ஏன் இவ்வளவு நேரம் என்று நேரத்தையும் கடிந்துகொண்டிருந்தான். இதற்கிடையே அவன் தன் நினைவுகளையும் அசை போட்டுக்கொண்டிருந்தான்.

அவளை எப்படி சந்தித்தான், எப்படி அவர்கள் உறவு வளர்ந்தது, எல்லாவற்றையும் ஒரு மாதிரியான இன்பத்துடன் நினைத்துபார்த்துக்கொண்டிருந்தான். உண்மையை சொல்லப்போனால் அவர்கள் சந்தித்தே இல்லை. அவர்கள் இருவரும் Orkut 'Friends'. இவன் தான் ஏழேட்டு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் Orkut-இல் இவளுக்கு Scrap செய்தான். தன்னுடன் கல்லூரியில் படித்த சந்தியா என்று நினைத்து தான் முதலில் பேச ஆரம்பித்தான். ஆனால் தான் வேறு சந்தியா என்றும், ஆனந்த் என்பவரை தனக்கு தெரியாது என்றும் அவள் பதில் அளித்தாள். அது அவ்வளவு தான் என்று தான் அவன் முதலில் நினைத்தான், ஆனால் பாட்டு, இளையராஜா, SPB இப்படி இருவருக்கும் இருந்த சில Common Interests அவர்கள் நட்ப்பை வளர்க்க உதவி செய்தது.

நட்பு வளர்ந்தது, எப்போதாவது Chat செய்தவர்கள் அடிக்கடி பேச ஆரம்பித்தார்கள், Orkut-இல் Testimonial எழுதினார்கள். நட்பு வலுத்தது, கைபேசி எண்கள் பரிமாறிக்கொண்டார்கள், கணக்கில்லாமல் SMS பரிமாற்றங்கள் நடந்தன. கைபேசியிலும் Chat-லும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினார்கள். இப்படியே நட்பு முதிர்ந்து காதல் ஆனது. இது பார்க்காமலேயே, பேசி பேசி மட்டும் வந்த காதல். அதிசய காதல்...! அபூர்வ காதல்...!! இப்படி தன் காதலை நினைத்து ஆனந்த் மிகவும் பெருமைபட்டுக்கொள்வான்.

இப்படியே நினைவுகளில் ஆழ்ந்திருந்த ஆனந்த் நிகழ் காலத்துக்கு திரும்பி வந்தான். இன்று மதியம் பேசிய பொது இரவு சரியாக பத்தரை மணிக்கு வருவதாக கூறியிருந்தாளே, ஆனால் மணி இப்போது பதினொன்றை தாண்டி விட்டது இன்னும் அவள் Online வரவில்லையே என்று நினைத்து கொண்டிருந்த போதே அவள் வந்து விட்டாள். "Sorry Dear... Konjam Late aayittu... Im callin u..." என்று type செய்துவிட்டு அவனை Chat Messenger-இல் Call செய்தாள். என்னென்ன செய்தார்கள், எங்கெல்லாம் போனார்கள் என்ற பேச்சுக்களுடன் சில கொஞ்சல்கள், சின்ன சின்ன கோபங்கள் என்று நேரம் கடந்தது.

நேரம் பன்னிரெண்டை தாண்டியிருக்கும், ஆனந்துக்கு Chat வழியாக சில வெடி சத்தங்கள் கேட்டது. என்னவென்று கேட்டதற்கு சந்தியா "Boys Hostel-ல யாருக்கோ Birthday-ன்னு நெனைக்குறேன்... அது தான் பட்டாசு போட்டு கொண்டாடுறாங்க..." "சரி ஒரு நிமிஷம், நானும் போயி என்னன்னு பாத்துட்டு வரேன்..." என்று சொல்லிவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் திரும்பி வந்தாள், "Im Back..." என்ற message-ஓடு. மீண்டும் பேசி ஆரம்பிக்கவில்லை, அதற்க்கு முன் "Happy Birthday Happy______...ஹா ஹா ஹா... ஹீ ஹீ ஹீ..." "ஹ்ம்ம்... ஹ்ம்ம்... நடத்து நடத்து..." என்றெல்லாம் சில கூச்சல்களும் சிரிப்பொலிகளும் சந்தியாவின் அறையில் அரங்கேறியது ஆனந்துக்கு கேட்டது. அவர்கள் பேசியது அவனுக்கு சரியாக கேட்கவில்லை, ஆனால் அவர்கள் சந்தியாவை கிண்டல் செய்கிறார்கள் என்று மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது.

"என்ன ஆச்சு... உன்ன கிண்டல் பண்றாங்க போல... என்ன விஷயம்...?" என்று கேட்டான். என்றும் எதற்கும் நேரடியாக பதில் சொல்லி வந்தவள் "இல்ல... ஒண்ணும் இல்ல... சும்மா தான்..." என்று சமாளிக்க பார்த்தாள், கொஞ்சம் வெட்கத்துடன். உடனே தன்னையும் சந்தியாவையும் சேர்த்து தான் கிண்டல் செய்தார்கள் போலும் என்று எண்ணியவன் அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டான், அவளும் கொஞ்ச நேரம் சமாளிக்க முயன்றாள், இனிமேல் முடியாது என்று புரிந்தவள் "சரி... சரி... சொல்லறேன்..." என்றாள். "ஹை... இன்று வரை நாங்கள் எங்கள் காதலை ஒருவருக்குள் ஒருவரே வைத்துக்கொண்டிருந்தோம்... இன்று அவள் இதை பற்றி சொன்ன உடனே... ஆமா உண்மை தானே என்று கூறி propose செய்வதை simple அக முடித்து விடலாம்..." என்று எண்ணினான்.

"நான் ரொம்ப நாளா சொல்லணும்-ணு தான் நெனச்சுட்டு இருக்கேன்... ஆனா என்னமோ ஒரு சின்ன தயக்கம்..." என்று அவள் ஆரம்பிக்க ஆனந்துக்கு மனசெல்லாம் ஒரே சந்தோஷம். "இண்ணைக்கு Boys Hostel-ல ஒருத்தனுக்கு Birthday-ணு சொன்னேன்-ல..." என்று அவள் கூறியதும், அவனுக்கு தூக்கி வாரி போட்டது, "என்னடா நடக்குது" என்று குழம்பினான். அவள் தொடர்ந்தாள் "... அவன்.. கௌதம்... என்னோட... ஹ்ம்ம்... என்னோட Boy-Friend..." என்று அவள் சொல்லி முடிக்க, அவனுக்கு தான் இருந்த நாற்காலி உடைந்து, அவன் தரையில் விழுந்து, அப்படியே பூமியை பிளந்து ஒரு படுகுழியில் விழுவதுபோல் உணர்ந்தான். இப்போது நடந்து முடிந்தது ஒரு கனவாக இருக்க கூடாதா என்று அவன் எண்ணினான். "அவன் இன்னக்கே எனக்கு Treat குடுத்துட்டான்... அதான் நான் இன்னக்கு வர கொஞ்சம் Late ஆச்சு..." என்று ஆரம்பித்து அவள் என்னென்னமோ சொல்லிக்கொண்டே போனாள். அவன் அதை கவனித்ததாக தெரியவில்லை.

அவனுக்கு அழுகை அழுகையாய் வந்தது. நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. தான் கட்டியதெல்லாம் வெறும் மனக்கோட்டை தானா ? அவளுக்கு உண்மையிலேயே என் மேல் காதல் இல்லையா ?? நான் தான் நடப்பை காதல் என்று எண்ணிய மூடனா ??? ஒரு வேளை அவள் சும்மா விளையாடுகிராளோ ???? இப்படி கேள்விகள் எழ அவனுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும்போல் இருந்தது, ஆனால் "Hello... Hello... இருக்கியா டா...?" என்ற அவள் குரல் அவனை மீண்டும் சுயநினைவுக்கு திருப்பியது. அவனும் பதில் சொன்னான், எதையோ இழந்தவன் போல் "ஹ்ம்ம்... இருக்கேன்" "... ஆமா... எத்தன நாளா...?" என்று அவன் தொடர "என்ன... ஒஹ்... அதுவா... அதான் ரெண்டு வர்ஷமா-ன்னு சொன்னேன்-ல... ஏன்... என்ன ஆச்சு...?" என்றாள். "இல்ல... கவனிக்கல... ஒண்ணும் இல்ல... சும்மா தெரிஞ்சிக்கலாம்-ணு தான் கேட்டேன்..." என்று சமாளித்தான்.

தன் காதல் சொல்வதற்கு முன்பே முடிந்து போன வேதனை... அது அதிசய காதலோ அற்புத காதலோ அல்ல, வெறும் கற்பனை காதல் தான் என்பதை உணர்ந்த ஏமாற்றம்... தன்னை பார்ப்பதற்கு முன்னாலே அவள் வேறொருவனின் காதலி என்ற உண்மை அவனுக்கு அளித்த சிறிய ஆறுதல்... ஒரு வேளை என்னை முதலில் பார்த்திருந்தால்... என்று தன்னை தானே தேற்றிக்கொள்ள உருவான எண்ணம்...

இந்த எண்ணபெருக்குகளின் நடுவில் அவள் கேள்விகளுக்கு என்னன்னெமோ பதில் சொன்னவனின் கைவிரல்கள் Laptop Keyboard-இல் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தன. அவன் 5600 Members இருந்த 'First Love' Community-இல் இருந்து Unjoin செய்து விட்டு 24000 Members உள்ள 'I Cannot Forget My First Love' Community-இல் Join செய்ய Request அனுப்பினான். அவன் Request அடுத்த கணமே ஏற்றுக்கொள்ளப்பட்டது... "... no matter how much pain it has caused, no matter how many tears have fallen, first love will never leave my soul... (... எத்தனை வலி தந்திருந்தாலும், எவ்வளவு கண்ணீர் சிந்தியிருந்தாலும், முதல் காதல் என்றும் என் நெஞ்சை விட்டு நீங்காது...)" என்று அந்த Community அவனை வரவேற்றது...

Tuesday, October 7, 2008

உறவா...? உணர்வா...??


நட்பு உண்மையானதென்றால்,
காதல் தெய்வீகமானது...

வற்றாத கேணி தான் நட்பென்றால்,
நாளை பெய்ய போகும் மழை காதல்...

நட்பில் எதிர்பார்ப்புகள் இல்லையென்றால்,
காதலில் புரிதலும், விட்டு கொடுத்தலும் உண்டு...

தோல்விக்கு அப்பாற்பட்டது நட்பென்றால்,
தோல்வியிலும் வெற்றி காண்பது காதல்...

நான் அவளிடம் கொண்டது இதில் எது - நட்பா...? காதலா...??

இல்லை, எங்கள் உறவு இந்த இரண்டு;
மூன்றெழுத்து வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டதா...???

ஆம்...!!!
இது காதல் இல்லாத நட்பு...;
காமம் இல்லாத காதல்...;

இந்த புனிதமான சங்கமத்தில் பிறந்த அமரமான உறவு;
பேர் சொல்ல முடியாத ஒரு தூய உணர்வு...!!!

Wednesday, September 24, 2008

காதல் பரிசு...

நம் வாழ்க்கையெனும் வானத்தில்;
காதலெனும் கார்மேகம்;
ஆனந்த மழையாய் பொழியும் என்று நினைத்தேன்....

உன் அன்பு;
இதமான தென்றலாய் வீசும் என்று எதிர்பார்த்தேன்,

ஆனால் நீயோ மௌனம் எனும் சூறாவளியை வீசி;
காதல் கார்மேகத்தையும் கலைத்து;
என் நெஞ்சில் பேரிடியெனும் பரிசையும் தந்துவிட்டாய்....

ஆனால் பெண்ணே....
என் நினைவுகளில் மின்னலொளியாய் பதிந்த உன்னை;
அழிக்க எந்த சக்தியாலும் முடியாது....!!!

Thursday, August 28, 2008

கனவுத்தோழி....

அவன் அவளிடம் பேசி ரொம்பக்காலம் ஆகி விட்டது. ஆமாம், முகம் கொடுத்து பேசி சுமார் ஐந்து வருடமாவது இருக்கும், சும்மா "வாங்க..." என்றும் "எப்பிடி இருக்க..." என்ற கேள்விக்கு "நல்லா இருக்கேன்..." என்று Formality ஆக பேசியே இரண்டு வருடம் இருக்கும். சின்ன வயதில் மிக நெருக்கமாக பழகிய தன் தோழி இப்பொழுது தன்னை பார்த்தால் சற்று புன்னகை செய்ய மூன்று முறை யோசனை செய்கிற நிலைமை, இது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று நான் இப்பொழுது சொல்லி எந்த பயனும் இல்லை, நான் அதை சொல்ல போவதும் இல்லை. தவறு அவன் பேரிலும் இல்லை அவள் பேரிலும் இல்லை என்பது மட்டும் உண்மை.


இப்படி இருந்த நிலையில் ஒரு நாள் அவனுக்குள் ஒரு எண்ணம் முளைத்தது. அப்படி திடீர் என்று முளைத்த எண்ணம் ஒன்றும் இல்லை, பல நாட்க்களாக வளர்ந்து வந்த எண்ணம் அன்று முழு வளர்ச்சி அடைந்தது என்பதே உண்மை. அது என்னவென்றால் இப்பொழுது அவளை தொலைபேசியில் (கைபேசியில்) அழைத்து பேசினால் என்ன என்பது தான். இருந்தாலும் அவனுக்குள் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. இத்தனை காலம் கழித்து அழைத்துப்பேசினால், அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாள்.... தன் பெற்றோரிடம் 'போட்டு கொடுத்து' விடுவாளோ.... அப்படி செய்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்.... அவனது ego வும் அவனை தடுத்து. "இத்தனை காலமாக உன்னை மதியாத அவளை நீ ஏன் அழைத்து பேசணும்.... அது உன் ஆண்மைக்கு இழுக்கு அல்லவா....????" என்று அது கேவலமாக கேள்வி கேட்டது.


அன்று ஞாயற்றுக்கிழமை. அப்படி அவளை அழைக்க வேண்டும் என்றாலும், அவள் கைபேசி எண் தெரியாது. அதை எப்படி தெரிந்து கொள்ள.... யாரிடம் கேட்டால் "மீசையில் படாமல் கூழ் குடிக்கலாம்....".... ? இப்படி ஆயிரம் கேள்விகளுக்குள் மாட்டிக்கொண்டு அவளிடம் பேசவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்தான். இப்படி யோசித்துக்கொண்டே அவன் அவன் படுக்கையில் அமர்ந்தான்.


ஒரு முடிவெடுத்தால், அதை மீறுவதென்பது நமக்கு தான் ஹல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே.... அதேப்போல் ரொம்ப கஷ்ட்டப்பட்டு அவள் கைபேசி எண்ணை கண்டு பிடித்தே விட்டான்.


எண் கிடைத்துவிட்டாலும் எப்படி பேச, என்ன பேச.... இப்படியெல்லாம் பல தயக்கங்களால் உடனே அவளிடம் உடனே பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தயக்கங்களை தள்ளி வைத்து ஒரு வழியாக அன்றே அவளிடம் பேச ஆயத்தமானான். கைபேசியில் Save செய்து வைத்திருந்த அவள் எண்ணை அழுத்தினான்.... "தக் தக்...தக் தக் தக்..." இது அவன் இதயத்துடிப்பு.... அவள் ஏனோ கைபேசியை எடுக்கவேயில்லை.... சரி போகட்டும், இதோடு அவளோடு பேசுவதற்கான தன் முயற்சியை கைவிட்டுவிட முடிவெடுத்தான். இது மீறுவதற்கான முடிவல்ல, உறுதியான முடிவு.


ஆனால் அவன் சற்றுமே எதிர்பாராத ஒரு திருப்பம் சில நிமிடங்களில் ஏற்ப்பட்டது. அவனுக்கு ஒரு SMS வந்தது "Who are you ? Do I know you ?". ஆம் அது அவளிடம் இருந்தே தான். அவன் முகத்தில் மலர்ந்த அந்த ஆனந்தம் அவனுடன் இருந்த அவன் நண்பர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. "டேய் ஆனந்த்.... திடீர்ன்னு என்னடா இவ்வளவு ஆனந்தம்.... என்ன விசேஷம்.... " என்று கேட்டனர். அவன் கதை முழுவதையும் சுருக்கமாக சொன்னான், சொல்லிவிட்டு அவளுக்கு பதில் SMS அனுப்ப போவதாக சொன்னான். அவர்கள் அவன் மண்டையில் ஒரு குட்டு கொடுத்துவிட்டு, அவளை Call பண்ண சொன்னார்கள். ஆனால் அவன் அவர்கள் பேச்சை தட்டியிருக்கலாம். தட்டியிருந்தால் அவன் அந்த பேரதிர்ச்சிக்கு ஆளாயிருக்கமாட்டான்.


அவன் அவள் கைபேசிக்கு அழைத்தான், அவளும் எடுத்தாள், இவன் பேச ஆரம்பிக்கும் முன் அவள் பேசினால் "ஹலோ, நான் சந்தியா பேசுறேன், நீங்க யாரு பேசுறீங்க...". இவன் தொடர்ந்தான் "ஹ.. ஹல.. ஹலோ.. நா.. நான் தான் ஆ.. ஆனந்த் பேசுறேன்..." "ஹ்ம்ம்...சொல்லுங்க" அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக அவளிடமிருந்து சற்றுமே ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. அது அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது. இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு பேச்சை தொடர்ந்தான். "நல்லா இருக்கியா....பேசி எத்தன காலம் ஆயிட்டு...." "ஹ்ம்ம்.... நான் நல்லா இருக்கேன்.... நீங்க நல்லா இருக்கீங்களா...." "நான் நல்லா தான் இருக்கேன்.... நீ இப்ப எங்க இருக்க.... என்ன பண்ணற.... " "கோயம்புத்தூர் இன்ஜினியரிங் காலேஜுல படிக்குறேன்.... Second year.... " "அப்படியா.... கொயம்புத்தூர்லயா.... சரி சரி.... நல்ல படிக்குரியா.... " "ஹ்ம்ம்.... நீங்க இப்ப எங்க இருக்கீங்க.... " "நான் பாம்பேல இருக்கேன்...." அவன் தொடர்ந்தான் "நீ கோயம்புத்தூருல இருக்க.... எத்தன நாளுக்கு ஒருக்கா ஊருக்கு போயிட்டு வருவ...." "ஹ்ம்ம்.... மாசத்துக்கு ஒரு தடவ போவேன்.... Second Saturday வரப்ப போவேன்.... "


இப்படியே சில நிமடங்கள் கடந்தன. ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் "ஹ்ம்ம்..." என்று சொல்லுவது, ஒரு ஈடுபாடு இல்லாமல் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதிலளித்து வந்தது அவனுக்கு கொஞ்சம் சங்கடமாகே இருந்தது. இவனும் பொறுத்து பார்த்தான், பொறுமை கேட்டவுடன் ஒரு கேள்வி கேட்டான்.... "நான் உங்கிட்ட பேசுறது Disturbtion ஆ இருக்கா.... இருந்துதுன்னா சொல்லு.... நான் பிறகு எப்பவாவுது கூப்பிடுறேன்...." அவன் இதற்க்கு எதிர்பார்த்த பதில் "இல்ல அப்பிடியெல்லாம் இல்ல.... நீங்க சொல்லுங்க.... " ஆனால் அவள் கூறிய பதில் "ஹ்ம்ம்.... நாளைக்கு Internals இருக்கு படிச்சிட்டு இருந்தேன்.... ரொம்ப tough subject.... ஒண்ணுமே படிக்கல.... அதான்.... " இவன் "சரி பரவாயில்ல.... நீ படி.... நான் weekend ல கூப்பிடுறேன்...." என்று கூறுவதற்கு முன்னாலே அவள் தொடர்ந்தாள் "அது மட்டும் இல்ல.... வீட்டல நான் உங்க கிட்ட பேசுனது தெரிஞ்சா பிடிக்காது.... அதுனால...." "அதுனால...." "நீங்க இனிமே என்ன கூப்பிட வேண்டாம்...." என்று கூறி இணைப்பை துண்டித்தாள். அவள் சொல்லாலும் செயலாலும் அவர்கள் உறவையே வெட்டி விட்டது போல் அவன் உணர்ந்தான்.... இது அவனுக்கு பேரதிர்ச்சியை தந்தது, அந்த அதிர்ச்சி அவனை தூக்கத்தில் இருந்தே எழுப்பி விட்டது.


கண்ணை நன்றாக கசக்கிவிட்டு பார்த்தால் அவன் கட்டிலில் படுத்திருந்தான். தலைக்கு மேல் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தபோதும் அவன் நெற்றியில் வேர்த்திருந்தது. அவன் கைபேசியை எடுத்து பார்த்தான். அவள் கைபேசி எண் அவனிடம் இல்லை. இப்பொழுது அவன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தின் மயக்கத்தில் இருந்தும், கனவின் அதிர்ச்சியிலும் இருந்து விழித்திருந்தான். யாரிடமிருந்து, எப்படி அவள் எண் கிடைக்கும் என்று யோசித்தபடியே தூங்கியவன் கண்ட கனவு தான் அது என்று அவன் புரிந்து கொண்டான்.


அந்த கனவின் அர்த்தம் என்னவென்று அவன் ஆராயவில்லை. ஆனால் அவன் தூங்குவதற்கு முன் எடுத்த முடிவை அப்பொழுது உறுதி செய்துகொண்டான்.... "சந்தியாவை ஒருநாளும் தொடர்புகொள்ள நான் முயற்சி செய்ய மாட்டேன்....". கனவில் அவள் தந்த அதிர்ச்சி உண்மையில் கிடைத்தால், அது அவன் தாங்கிக்கொள்வதை காட்டிலும் மேலாக இருக்கும் என்று அவன் உணர்ந்திருந்தான்.... அது தான் உண்மையும்...!!!

Tuesday, August 12, 2008

ஹைதராபாதில் இன்னுமொரு மழைக்காலம்....

மழையும் நானும்...., என்னை வரவேற்க வந்த மழை.... & கேரளாவிலும் என்னை வரவேற்ற மழை.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...

இந்த மாநகரத்தில் நான் கால் வைத்து ஒரு வருடம் தாண்டியாகிவிட்டது.... கடந்த வருடம் என்னிடம் Bike இல்லை.... மழையும் குறைவு.... அதனால் மழைக்காலம் என்னை அதிகம் வதைக்கவில்லை.... இம்முறை மேற்கூறிய இரண்டும் மாறியதால் இங்கு நான் மழையை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.... தினம் தினம் மழையில் நனைவது வழக்கம் ஆகிவிட்டது.... அதிலும் நாங்கள் வீடு மாறியபோது உண்டான அனுபவம் மற்றவற்றை சிறுமை படுத்திவிட்டது....

ஒரு வருடத்தில் நாங்கள் மாறும் மூன்றாவது வீட்டுக்கு மாறின போது உண்டான அனுபவம் தான் இது.... பகலெல்லாம் வேறு வேலை (நான் கிரிக்கெட் ஆட போனேன்.... என்னுடன் வாழும் நண்பர்கள் தூங்கினார்கள்) பார்த்துவிட்டு சாயங்காலம் 6:30 மணிக்கு நாங்கள் Lorry பார்க்க போனோம்.... ஒருவன் கிடைத்தான்.... அவன் ஆயிரம் ரூபாய் கேட்டான்.... முடியாது, அது ரொம்ப அதிகம் என்று சொன்ன போது.... மழை பெய்யும் போல் உள்ளது.... இருட்டியும் விட்டது என்றான்.... நாங்களும் சம்மதித்தோம்.... அவர் வாய்முஹுர்த்தம்.... நான் அங்கிருந்து புறப்படும் முன்பே மழையும் பெய்தது.... லேசாகவா பெய்தது.... இல்லை வானம் பொழிந்தது....

கொட்டும் மழையில் நாங்கள் பொருட்களை தெருக்கோடியில் நின்ற Lorry இல் ஏற்றினோம்.... மூன்று கட்டில், ஒரு Cooler, இரண்டு மேஜைகள், தொலைக்காட்சி, கணினி இப்படி அத்தனை பொருட்களையும் நாங்கள் மூன்று பேருமே ஏற்றினோம்.... என் அப்பா சொல்வார், மழையில் நன்றாக நனைந்தால் ஒன்றுமே செய்யாது.... லேசாக நனைந்தால் தான் ஜலதோஷம் வரும் என்று. அதை மனதில் வைத்தே நான் நன்றாக நனைந்தேன்.... அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது.... ஒரு மணி நேரம் தொடர்ந்து மழையில் நனைந்தும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.... நன்றி மழையே, இம்முறை நீ என் நம்பிக்கையை முறிக்கவில்லை....

பாவி செல்லும் இடம் பாதாளம் என்று மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.... அதுபோல் என் விஷயத்தில் நம்பிக்கையை காத்த மழை, என் கட்டில் விஷயத்தில் என் காலை வாரி விட்டது.... Lorry இல் கொண்டு வந்த போது மேலே அவர் ஏதோ ஒரு Sheet வைத்து மூடித்தான் வைத்திருந்தார். ஆனால் அந்த sheet இல் இருந்த ஒரு கீறல் வழியாக கசிந்த மழைநீரில் நனைந்து என் கட்டில் நாசமாக போனது.... கசிந்த நீருக்கு விழ வேறு இடமே கிடைக்கவில்லையோ.... அந்த மழைத்துளிகளும் என்னை போல் அந்த மஞ்சத்தில் ஓய்வெடுக்க ஆசைப்பட்டதோ.... யாம் அறியோம் பராபரனே.... ஆனால் இன்னும் அதே கட்டிலில் தான் நான் தூங்குகிறேன்.... என்று கட்டிலும் உடைந்து என் முதுகையும் உடைத்துக்கொள்ள போகிறேனோ....

அன்று என் நண்பர்கள் மழையை வெறுத்தார்கள் (இன்றைய நிலை தெரியவில்லை), நானும்.... அனால் அந்த அனுபவத்தில் ஒரு புதுமையும் இருந்தது.... வெறுப்பிலும் ஒரு சிறிய ஆனந்தம் இருந்தது, அந்த நனைதலில்....
அன்று ஆரம்பித்த மழை கடந்த இரண்டு நாட்கள் முன்பு வரை பிய்த்துக்கொண்டுதான் பெய்தது.... துணிகள் துவைத்துப்போட்டால் காயாது.... போதாதகுறைக்கு தினமும் உடுத்தும் உடைகள் சேரும் சகதியுமகத்தான் வீடு திரும்புகிறது....

நான் தலைக்கு எண்ணை போட்டு மூன்று நாள் ஆகின்றது.... ஆம் குளிரில் நான் உறைவது போலவே எண்ணையும் உறைந்துபோகிறது.... ஆனாலும் இந்த குளிரை நான் மிகவும் ரசிக்கிறேன்.... ஆனால் என்ன குளிருக்கு இதமாக நல்ல டீயோ காபியோ இங்கு இல்லை.... இந்த குளிரில் அதிக நேரம் தூங்க விரும்பும் எனக்கு Training என்ற பேரில் தூக்கத்துக்கும் சீக்கிரமாகவே முற்றுபுள்ளி....

கடந்த இரண்டு நாட்களாக மேகங்கள் சற்று இடம் விட சூரியன் மெல்ல தலை காட்டுகிறது.... இது இப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறேன்.... அனால் இந்த மழை என்று தான் என் நம்பிக்கைப்படி நடந்துள்ளது.... மேலும் என்னுடன் விளையாடுவது தானே அதற்க்கும் பிடிக்கும்.... பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் மழையின் மனதில் என்ன உள்ளதென்று....

இந்த வருடம் கேரளாவில் மழை குறைவாம்.... ஜூன் ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லையாம்.... எல்லாவற்றுக்கும் சேர்த்து அடுத்த மாதம் பயங்கரமாக மழை பெய்யும் என்பது அங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பு....

நான் அடுத்த மாதம் திருவனந்தபுரம் செல்கிறேன், ஓணம் பண்டிகைக்காக.... அதை எப்படியோ தெரிந்துகொண்ட இந்த பொல்லாத மழை கேரளாவிற்கு என்னை வரவேற்ப்பதர்க்காகவே இரண்டு மாதம் பெய்யாமல் காத்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு தானே தெரியும்....

கேரளாவிலும் என்னை வரவேற்ற மழை....

மழையும் நானும்.... & என்னை வரவேற்க வந்த மழை.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...

ஹைதராபதிற்கு வந்த பிறகு நான் மூன்று முறை திருவனந்தபுரம் சென்றுள்ளேன்.... முதல் இரண்டு முறையும் என்னை மறந்த மழை (நானும் மழையை மறந்து விட்டேன்), மூன்றாவது முறை வட்டியும் முதலுமாக கணக்கை முடித்துவிட்டது.... 'என்னை மறந்ததேன்...' என்று நான் மழையை கேட்கவில்லை, அனால் மழை என்னிடம் அப்படி கேட்க விரும்பியதோ என்னமோ, மழையை மறந்ததற்கு எனக்கு நல்ல தண்டனையையும் தந்தது....

ஜூன் மாதம், ஹைதராபாத்தில் வெயில் மனிதனை பகலில் பொரித்தெடுத்தது.... ரயிலில் வந்த போது நான் அதை நன்றாக அனுபவித்தேன்.... அப்போது மழை பெய்யக்கூடாதா என்று நான் எதிர்பார்த்து உண்மை தான்.... அப்போது சற்று மழை பெய்யவும் செய்தது.... அதற்க்கு நான் வருணதேவனுக்கு நன்றியும் தெரிவித்தேன்.... ஆனால் நன்றி சற்று கூடுதலாக சொல்லிவிட்டேன் என்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிறகு தான் புரிந்தது....

கொல்லம் வருவது வரை மழைக்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லை.... அனால் கொச்சுவேளி (திருவனந்தபுரத்திற்கு முந்தய நிறுத்தம்) வந்த போது கார்மேகம் வானத்தை ஆக்கிரமித்திருந்தது.... மழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக வீடுபோய் சேர வேண்டுமென்ற என் ஆசையை வருணபகவான் இம்முறை கேட்க்கவில்லை.... ரயில் நிலையத்தில் நான் கால் வைப்பதற்கு சில நோடிகள் மட்டும் இருக்கவே மழை வானத்தை பிய்த்துக்கொண்டு பெய்ய ஆரம்பித்தது....

நனைந்துகொண்டே என் ராட்ஷச பெட்டியை உந்தியும் தூக்கியும் எப்படியோ ரயில் நிலைய வாசல் வந்துவிட்டு தந்தையை தொலைபேசியில் அழைத்தேன்....அழைத்து இப்படி பேசினேன்....

நான்: "அப்பா....இங்க ரொம்ப மழை பெய்யுது....நீங்க வர வேண்டாம்....நான் ஆட்டோ பிடிச்சு வந்திருதேன்...."

அப்பா: "ஆஹா....நீ வந்துட்டியா....மழை எங்க....இங்க மழையே இல்லையே"

நான் என் விதியை நொந்துகொண்டே தொடர்ந்து பேசினேன்....

நான்: "அப்படியா....ஆனா இங்க நல்ல மழை....பரவாயில்ல....நான் வந்திருவேன்....நீங்க வீட்ல இருங்க...."

பேசிக்கொண்டிருந்தபோதே என் கைபேசியின் உயிர் தோய்ந்துகொண்டிருப்பதையும் நான் கவனிக்க மறக்கவில்லை.... அப்படியே நான் மழையில் நனைந்து கொண்டே ஆட்டோ ஏறுவதற்காக Pre-paid Counter முன் நின்று கொண்டிருந்தேன்.... நானும் நின்றுகொண்டுதான் இருக்கிறேன் வரிசை முன்னாள் நகழவே மறுத்தது.... விசாரித்ததில் ஆட்டோவுக்கே தட்டுபாடு என்று தெரிந்துகொண்டேன்.... அதற்கிடையில் மழை சற்று ஓய்ந்தது.... உடனே நான் தந்தையை கைபேசியில் அழைத்து இப்படி பேசினேன்....

நான்: "அப்பா....இங்க ஆட்டோவே இல்ல....மழையும் நிண்ணுருச்சு....நீங்க உடனே கிளம்பி வாங்க....நான் wait பண்ணறேன்...."

அப்பா: "சரிடா....நான் பத்தே நிமிஷத்துல வந்துருதேன்...."

அதற்கிடையில் என் கைபேசி தன் கடைசி நொடிகளில் வாழ்ந்துகொண்டிருந்தது.... பத்து நிமிடம் தாண்டி கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.... அப்பாவின் கைபேசி எண்ணிலிருந்து தான் அழைப்பு.... அவர் வந்துவிட்டார் என்ற ஆனந்தத்தில் நான் பேச ஆரம்பித்தபோது என் கைபேசி செத்தது....

சரி பேசாவிட்டால் என்ன.... வெளியே போய் தேடிப்பார்த்தால் தெரியும் எங்குள்ளார் என்று.... இந்த எண்ணத்தில் நானும் தேடிப்பார்த்தேன்.... இல்லை.... அப்பா அங்கு எங்கும் இல்லை.... விதியின் வேடிக்கையை எண்ணி வியந்து கொண்டு நான் ரயில் நிலையத்தில் உள்ள போது தொலைபேசியிலிருந்து அப்பாவின் கைபேசியை அழைத்தேன்.... 'முடியல....' 'Number Busy' என்று கூறி என் உயிரை எடுத்தது.... முப்பது மணிநேரம் ரயிலில் சிலவு செய்தபோது தோணாத அலுப்பு அந்த முக்கால் மணிநேரத்தில் எனக்கு தோணியது.... எப்படியோ அப்பாவின் கைபெசியுடன் தொடர்பு கிடைத்தது.... அவரிடம் இருந்து வந்த பதில், மழை ஏன் என்னுடன் இப்படி விளையாடுகிறது என்று என்னை எண்ணச்செய்தது.... ஆம், "இப்ப எங்க இருக்குரீங்கப்பா...." என்ற என் கேள்விக்கு அப்பா சொன்ன பதில் "வீட்ல இருந்து கெளம்பின ரெண்டாவுது நிமிஷம் மழை பயங்கரமா விழ ஆரம்பிச்சுருச்சு....அதான் கொஞ்சம் ஒதுங்கி நிக்குறேன்....மழை கொஞ்சம் விட்டுருக்கு....இன்னும் பத்து நிமிஷத்துல நான் வந்துருவேன்...."

ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தால் இப்பொழுது ஆட்டோவுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, மழைக்கும்.... இன்னொருமுறை risk எடுக்க விரும்பாததால் மழையானாலும் என்னவானாலும் அப்பாவுடனே வீட்டிற்கு போவது என்று காத்திருந்தேன்.... அப்பாவும் வந்தார்.... நன்றாக நனைந்திருந்தார்.... நானும் மழையை பொருட்படுத்தாமல் அப்பாவுடன் scooter இல் ஏறி கிளம்பினேன்....

இப்படி மழையில் ஆரம்பித்த அந்த விடுமுறை மழையில் நனைந்தே முடிந்ததும் போனது.... தங்கையின் பிறந்தநாளும் அக்காவின் நிச்சயமும் அந்த நனைந்து போன விடுமுறையின் Highlights....

என்னை வரவேற்க வந்த மழை....

மழையும் நானும்.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...

இப்படியும் மழை பெய்யக்கூடுமா.... பெய்தாலும் இப்படியா தண்ணி ரோட்டில் தங்கும் என்று என்னை வியக்க வைத்தது அந்த நாள். அந்த நாள் இன்றைக்கு ஒரு வருடத்துக்கும் முன் நான் இந்த ஹைதராபாத் மாநகரில் கால் வைத்த முதல் நாள்....

ஹைதராபாத்தில் வேலை கிடைத்த என்னை இங்கு வரை விட்டு செல்ல வந்த என் தந்தைக்கோ அது எங்களை ஹைதராபாத்திற்கு வரவேற்கின்ற மழையாகவே தோன்றியது.... அப்படியே நானும் எண்ணிக்கொண்டேன்.... அந்த மழைக்காலம் என்னை அதிகம் தொல்லை படுத்தவில்லை, அந்த முதல் நாளை தவிர....

அந்த முதல் நாள் மழையை சற்று சுருக்கமாக விவரிக்கவேண்டும் என்றால், அதற்க்கு நான் அன்று நடந்த சிறிய சம்பவங்களை இங்கு கூறியே ஆக வேண்டும்....

சிகந்தராபாத் ரயில் நிலையத்தில் இறங்கிய எங்களை வரவேற்றது மழை அல்ல, என் உறவுக்கார அண்ணன்.... அவர் வீட்டிற்கு சென்ற நாங்கள், அன்று சாயங்காலம் நகரத்தை சுற்றி பார்த்து விட்டு எனக்கு Company தந்த Guest House க்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்....

வீட்டில் இருந்து காரில் கிளம்பிய சமயம் முதலே மழை சிறிதாக தூறத்தான் செய்தது..... நேரம் செல்லச்செல்ல மழை வலுக்கவும் செய்தது. நாங்கள் நெக்லஸ் ரோடு வந்தடைந்த போது ரோட்டில் தண்ணி பயங்கரமாக ஓடுவதை பார்த்து நான் சற்றே பயந்துவிட்டேன்.... நதியே இல்லாத இந்த ஹைதராபாத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்தால் யாருக்கு தான் வியப்பாக இருக்காது.... ஆனால் என் அண்ணன் 'இதெல்லாம் இங்க சாதரணமப்பா' என்ற மாதிரி ஒரு Expression கொடுத்தார், சரி என்று நான் திரும்பி மழையை ரசிக்கலாம் என்று திறந்திருந்த கார் ஜன்னல் பக்கம் திரும்பினால், சற்றுமே எதிர்பாராமல் என் மேல் ஒரு வாளி தண்ணி தெளிக்கப்பட்டது.... நன்றி: எங்களுக்கு இடது பக்கத்தில் விரைந்து சென்ற இன்னொரு கார். அண்ணனிடமிருந்து 'அப்பவே சொன்னோம்ல' என்ற Expression வர நானும் கார் ஜன்னலை மூடிக்கொண்டு மழையை ரசிக்கலாம் என்று முடிவுசெய்தேன்....

ஒரு வழியாக லும்பினி பார்க் (ஆம் வெடிகுண்டு வெடித்த அதே பூங்கா தான்) வது சேர்ந்தோம். அந்நேரம் மழையின் வேகம் சற்று குறைந்திருந்தது.... அந்த நம்பிக்கையில் நாங்கள் அந்த திறந்த அரங்கத்தில் Laser Show பார்க்கச்சென்றோம்.... ஷோ ஆரம்பித்து சிறிது நேரத்தில் மழை மேலும் வலுத்தது.... மழையின் சீற்றம் கையை மிஞ்சியபோது அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நிழல் தேடி ஓட ஆரம்பித்தார்கள்.... நாங்களும் அவர்களில் உட்பட்டவர்கள் என்று இங்கு குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை என்று தோனுகிறது....

மழையின் பயங்கரத்தில் ஷோவும் நிறுத்தப்பட்டது.... ஒரு மணி நேரத்துக்கும் மேல் நின்ற பிறகு தான் இன்னும் நின்று பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.... எப்படியோ தத்தி பித்தி நன்றாக நனைந்து காருக்குள் நுழைந்தோம்.... நேரம் பத்து மணியையும் தாண்டி விட்டது....

ஒரு வழியாக Guest House க்கு வந்து சேர்ந்த போது மணி இரவு பதினொன்றரை.... நாங்கள் யாருமே இரவு உணவும் அருந்தவில்லை.... பசி வாட்டி எடுத்தபோதிலும் நாங்கள் அந்த இரவு மழைக்கு நன்றி சொல்லியே கடத்திவிட்டோம்.... ஹைதராபாத்துக்கு எங்களை வரவேற்ற மழைக்கு நன்றி சொல்லாமலிருப்பது தவறல்லவா....

மழையும் நானும்....

கேரளாவில் வளர்ந்த எனக்கு மழை ஒன்றும் புதிய விஷயம் அல்ல.... ஜூன் மாதம் ஒன்றாம் தேதி (முதல் வாரம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்) பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் பொழுது எங்குமே புதிய சீருடைகள், ஷூக்கள், புத்தகங்கள் வாங்குவது வழக்கம்.... ஆனால் கேரளாவில் இவையுடன் புதிய குடை வாங்குவதும் வழக்கம்.... ஜூன் மாதம் துவங்கும் மழை கேரளத்தில் மிக பிரசித்தம்....

நான் அப்படி கூறும் பொழுது ஜூனில் மட்டும் தான் அங்கு மழை பெய்ய்மோ என்று நீங்கள் எண்ண வேண்டாம்.... வருடத்தில் எட்டு முதல் பத்து மாதம் வரை அங்கு மழை பெய்யும்.... ஆனால் கோடை மாதங்களுக்கு பிறகு பெய்யும் அந்த ஜூன் மாத மழை புதிய வருடத்தை துவங்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு தனி குதூகலத்தை கொடுக்கும்....

அப்படி மக்களுக்கு தொல்லை தராத.... சில நேரம் மட்டும் பலமாகவும், மிச்ச நேரம் இதமாகவும் பெய்யும் இந்த மழையுடன் எனக்கு உண்டான சில அனுபவங்கள் தான் தொடரும் எழுத்துகளில் நான் பகிர்ந்துகொள்கிறேன்....

Monday, August 11, 2008

பிந்த்ரா சுட்ட தங்கம்....

இந்த முறை ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் 'பதக்க வேட்டை' சற்று சீக்கிரமாகவே ஆரம்பித்துவிட்டது....

சென்ற முறை ராஜ்யவர்தன் சிங்க் ராதோர் வெள்ளி வென்ற போதும் அதற்கு முந்தய முறை கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்ற போதும் அதற்கும் முந்தய முறை லியாண்டர் பயஸ் வெண்கலம் வென்ற போதும் நமது 'மெடல் வேட்டை' ஆரம்பம் ஆயிருந்தது.... ஆனால் என்னமோ அந்த வேட்டையில் நம் ஆட்கள் தேறவில்லை.... அந்த ஒன்றுக்கு மேலே முன்னேறவுமில்லை....

பொதுவாக நம் ஆட்கள் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றால் அவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கொடுத்து நம் அரசு கௌரவிப்பது வழக்கம்.... ஆனால் இவர் விஷயத்தில் அரசு சற்றே அவசரப்பட்டுவிட்டதென்று தோனுகிறது.... ஆமாம் இவர் அதை ஏற்க்கனவே வென்று விட்டார்.... பாவம் அரசு இவரை எப்படி கௌரவிக்க போகின்றது என்று தெரியவில்லை....

இவரை வைத்தே அடுத்த இருபது நாட்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் வியாபாரம் பார்த்து விடும்.... தொலைபேசி மூலம் இவரை.... நேரடியாக இவர் தந்தை, தாய், பாட்டி, தாத்தா, மாமா, ஒண்ணு விட்ட சித்தப்பா இப்படி அவருக்கு வேண்டியவர்கள் வேண்டாவதர்கள் அனைவரையும் பேட்டி கண்டு தொலைகாட்சியில் போட்டு காட்டுவார்கள்.... நம் மக்களும் (நீங்களும் நானும் உட்பட்ட எல்லோரையும் தான் குறிப்பிடுகிறேன்) வாயை பிளந்து அதை பார்த்து பெருமை படுவோம்.... தப்பி தவறி இன்னும் பதக்கம் வென்று விட்டால் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்....

நூறு கோடி மக்கள் உள்ள நம் நாட்டிலா இந்த அவல நிலை.... ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை நம் தமிழகத்தை காட்டிலும் குறைவு.... அனால் அவர்கள் அணியைச்சேர்ந்த ஒருவரே பல பதக்கங்களை வெல்கிறார்.... நம்மில் ஒருவர் ஒரு பதக்கம் வாங்குவதை நாம் இப்படி கொண்டாடுகிறோம்.... இது தான் விளையாட்டு துறையில் நம் நிலைமை.... கிரிக்கட்டில் மட்டும் நாம் புலி.... மீதியில் எல்லாம் எலி.... இல்லை அதற்கும் கீழ்.... இல்லாவிட்டால் நம் தேசிய விளையாட்டான ஹாக்கியில் நாம் இம்முறை தேறாமல் இருந்திருப்போமா.... (கிரிக்கெட்டிலும் நாம் எலி தானோ என்று இன்று முடிவடைந்த இலங்கை தொடர் ஓர் சந்தேகத்தை எழுப்புகுறது)

நம் ஆட்கள் 1984, 1988, 1992 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 'முட்டை' தான் போட்டார்கள்....1996 இல் சற்றும் எதிர்பார்க்காத டென்னிஸிலும் 2000 இல் சற்றே எதிர்பார்த்த பளு தூக்குதலிலும் 2004 இல் யாருமே எதிர்பாராத துப்பாக்கி சூட்டிலும் பதக்கம் வென்றோம்.... இந்த முறையும் எல்லோர் கவனமும் ககன் நாரங்கின் மேலும் சாயினாவின் மேலும் தான் இருந்தது.... எத்தனை பேர் இந்த இளைஞன் மேல் நம்பிக்கை வைத்தார்கள் என்று தெரியவில்லை....

ஒவ்வொருமுறையும் இந்தியாவுக்கு இப்படி ஒரு புதிய ஒலிம்பிக் நட்சத்திரம் உதிக்கின்றது.... அடுத்த முறை நம் நம்பிக்கையை வைப்பதற்காகவே.... அவர்கள் அதை தகர்ப்பதற்காகவே....

எது எப்படியானாலும் நாம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளோம்.... முதல் முறையாக ஒரு தனி இந்திய மனிதன் தங்கம் வென்றுள்ளான்.... (இதற்க்கு முன்பு வென்ற தங்கம் எல்லாம் ஹாக்கியில் வென்றது)

தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு என் உள்ளமார்ந்த வாழ்த்துக்கள்.... இந்தியா இந்த ஒரு நாளாவது பதக்க பட்டியலில் முதல் 15 இடத்திர்க்குள்ளே இருக்க காரணமாயிருந்த பிந்திராவுக்கு என் நன்றிகள்....பதக்க வேட்டையை ஆரம்பித்து வைத்து.... இந்த முறை இந்தியா கண்டிப்பாக நிறையா பதக்கம் வெல்லும் என்று இந்தியர்களை நம்பிக்கையுடன் மார்தட்ட வைத்த பிந்த்ராவுக்கு என் Salute....

வேட்டை இந்த ஒரு தங்கத்தோடு நின்று விடாமல் இருந்தால் நன்று....

ஜெய் ஹிந்த்....

தமிழ் பாமரனின் பிள்ளையார் சுழி....

தமிழை பொறுத்த மட்டிலும் நான் ஒரு பாமரன்....முறையாக எழுத்தோ வாசித்தலோ நான் பயின்றதில்லை....

வளர்ந்ததெல்லாம் கேரள நாட்டில் ஆயதினால் பள்ளி சென்று தமிழ் கற்கவில்லை....பத்திரிக்கை மற்றும் அதனுடன் வரும் இணைப்புகள் மட்டுமே எனது தமிழ் குருக்கள்....அதனுடன் தாயின் ஊக்குவிப்பும் எனது விருப்பமும் தான் நான் தமிழ் எழுதுவதற்கும் படிப்பதற்கும் காரணம்....

இந்நாளில் எனது தமிழ் ஆர்வம் சற்று மேலோங்கித்தான் நிற்கிறது....கல்கியின் அழியாத காவியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் மற்றும் சுஜாதாவின் பிரிவோம் சிந்திப்போம் II மற்றும் பல சிறுகதைகள் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது....அது என்னுள் தமிழ் ஆர்வத்தையும் தூண்டியது....

எந்த மொழியிலுமே எழுதவேண்டும் என்ற என்னமோ ஆர்வமோ எனக்கு இதற்க்கு முன்பு உண்டானதே கிடையாது....அனால் இப்பொழுது சில நாட்களாகவே அந்த ஒரு எண்ணம் உருவெடுத்து வந்துள்ளது....அதற்க்கு காரணம் என்னவென்று எனக்கு இன்னும் விளங்கவில்லை....

நண்பர்களின் BLOG வாசித்த பொது ஏன் நாமும் எழுதக்கூடாது என்று ஒரு எண்ணம் தோன்றும்....ஆனால் என்னால் அது முடியாது என்றும் ஒரு எண்ணம் அந்த எண்ணத்தை வெட்டி விடும்....இப்பொழுது இரண்டாவது எண்ணம் முதல் எண்ணத்தை வெட்டி விட்டத்தின் பலன் இந்த எழுத்து என்று தான் தோனுகிறது....

எது எப்படியோ....தமிழ் பாமரனான நானும் எதோ என் மனதில் தோன்றிய சிலவற்றை எழுத இங்கு வாய்ப்பு கிடைத்துள்ளது....இதில் ஆயிரம் சொற்குற்றம் அதற்கும் மேல் பல்லாயிரம் பொருட்குற்றமும் இருக்கலாம்....நீங்கள் உங்கள் கருத்துகளையும் திருத்தங்களையும் கூறி வாழ்த்தி என் வளர்ச்சிக்கு கை கொடுங்கள்....

நன்றி....