மழையும் நானும்.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...
இப்படியும் மழை பெய்யக்கூடுமா.... பெய்தாலும் இப்படியா தண்ணி ரோட்டில் தங்கும் என்று என்னை வியக்க வைத்தது அந்த நாள். அந்த நாள் இன்றைக்கு ஒரு வருடத்துக்கும் முன் நான் இந்த ஹைதராபாத் மாநகரில் கால் வைத்த முதல் நாள்....
ஹைதராபாத்தில் வேலை கிடைத்த என்னை இங்கு வரை விட்டு செல்ல வந்த என் தந்தைக்கோ அது எங்களை ஹைதராபாத்திற்கு வரவேற்கின்ற மழையாகவே தோன்றியது.... அப்படியே நானும் எண்ணிக்கொண்டேன்.... அந்த மழைக்காலம் என்னை அதிகம் தொல்லை படுத்தவில்லை, அந்த முதல் நாளை தவிர....
அந்த முதல் நாள் மழையை சற்று சுருக்கமாக விவரிக்கவேண்டும் என்றால், அதற்க்கு நான் அன்று நடந்த சிறிய சம்பவங்களை இங்கு கூறியே ஆக வேண்டும்....
சிகந்தராபாத் ரயில் நிலையத்தில் இறங்கிய எங்களை வரவேற்றது மழை அல்ல, என் உறவுக்கார அண்ணன்.... அவர் வீட்டிற்கு சென்ற நாங்கள், அன்று சாயங்காலம் நகரத்தை சுற்றி பார்த்து விட்டு எனக்கு Company தந்த Guest House க்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்....
வீட்டில் இருந்து காரில் கிளம்பிய சமயம் முதலே மழை சிறிதாக தூறத்தான் செய்தது..... நேரம் செல்லச்செல்ல மழை வலுக்கவும் செய்தது. நாங்கள் நெக்லஸ் ரோடு வந்தடைந்த போது ரோட்டில் தண்ணி பயங்கரமாக ஓடுவதை பார்த்து நான் சற்றே பயந்துவிட்டேன்.... நதியே இல்லாத இந்த ஹைதராபாத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்தால் யாருக்கு தான் வியப்பாக இருக்காது.... ஆனால் என் அண்ணன் 'இதெல்லாம் இங்க சாதரணமப்பா' என்ற மாதிரி ஒரு Expression கொடுத்தார், சரி என்று நான் திரும்பி மழையை ரசிக்கலாம் என்று திறந்திருந்த கார் ஜன்னல் பக்கம் திரும்பினால், சற்றுமே எதிர்பாராமல் என் மேல் ஒரு வாளி தண்ணி தெளிக்கப்பட்டது.... நன்றி: எங்களுக்கு இடது பக்கத்தில் விரைந்து சென்ற இன்னொரு கார். அண்ணனிடமிருந்து 'அப்பவே சொன்னோம்ல' என்ற Expression வர நானும் கார் ஜன்னலை மூடிக்கொண்டு மழையை ரசிக்கலாம் என்று முடிவுசெய்தேன்....
ஒரு வழியாக லும்பினி பார்க் (ஆம் வெடிகுண்டு வெடித்த அதே பூங்கா தான்) வது சேர்ந்தோம். அந்நேரம் மழையின் வேகம் சற்று குறைந்திருந்தது.... அந்த நம்பிக்கையில் நாங்கள் அந்த திறந்த அரங்கத்தில் Laser Show பார்க்கச்சென்றோம்.... ஷோ ஆரம்பித்து சிறிது நேரத்தில் மழை மேலும் வலுத்தது.... மழையின் சீற்றம் கையை மிஞ்சியபோது அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நிழல் தேடி ஓட ஆரம்பித்தார்கள்.... நாங்களும் அவர்களில் உட்பட்டவர்கள் என்று இங்கு குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை என்று தோனுகிறது....
மழையின் பயங்கரத்தில் ஷோவும் நிறுத்தப்பட்டது.... ஒரு மணி நேரத்துக்கும் மேல் நின்ற பிறகு தான் இன்னும் நின்று பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.... எப்படியோ தத்தி பித்தி நன்றாக நனைந்து காருக்குள் நுழைந்தோம்.... நேரம் பத்து மணியையும் தாண்டி விட்டது....
ஒரு வழியாக Guest House க்கு வந்து சேர்ந்த போது மணி இரவு பதினொன்றரை.... நாங்கள் யாருமே இரவு உணவும் அருந்தவில்லை.... பசி வாட்டி எடுத்தபோதிலும் நாங்கள் அந்த இரவு மழைக்கு நன்றி சொல்லியே கடத்திவிட்டோம்.... ஹைதராபாத்துக்கு எங்களை வரவேற்ற மழைக்கு நன்றி சொல்லாமலிருப்பது தவறல்லவா....
சிதறல்கள்
5 years ago
No comments:
Post a Comment